“வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
விசேடமாக வடக்கு மாகாணத்தினுள் கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைவோரைத் தடுப்பதற்காகக் கடற்படையினர் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடலோரப் பாதுகாப்பை கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைந்தால், அல்லது உள்நுழைந்து மறைந்திருந்தால், கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் அருகில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் அல்லது பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்
அத்துடன், அண்மைய நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களை வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்வது அவசியமாகின்றது. உடல்நிலையில் மாறுபட்ட அடையாளங்களை காணுமிடத்து உடனடியாக வைத்திய பரிசோதனைகளுக்குத் தங்களை ஈடுபடுத்தவதே பொருத்தமானதாகும்.
யாழ். போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைக்கழகத்திலும், பி.சி.ஆர். பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே, பொதுமக்கள் இயல்பான சந்தேகங்கள் ஏற்படுமிடத்து எவ்விதமான அச்சமும் அடையாது பரிசோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள முடியும்.
இதைவிட, அனைத்துப் பொதுமக்களும் பொதுவெளியில் நடமாடுவதை இயன்றளவில் தவிர்ப்பதுடன், முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பு திரவததை பயன்படுத்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் ஆகிய மூன்று விடயங்களையும் பின்பற்றுதலும் அவசியமானதாகின்றது.
சமூகப் பொறுப்புடன் வடக்கு வாழ் பிரஜைகள் நடந்துகொள்வதுடன் மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொது சுகாதரப் பணியாளர்கள் விசேட கவனம் கொண்டிருப்பதும் அவசியமாகின்றது. அதற்குரிய அறிவுத்தல்களையும் நான் வழங்கியுள்ளேன். மங்கல, அமங்கல நிகழ்வுகளின்போது வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகின்றது.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்குத் திட்டமிட்டு, தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும் முக்கியமான விடயமாகின்றது” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 59 கொரோனா தொற்றாளர்கள்
இதேவேளை, வட மாகாணத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை 59 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.
மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபரில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒட்டோபரில் 15 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை
கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் 378 பேருக்கும் நேற்று 385 பேருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த சிலருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிதாக வடமாகாணத்தில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், கடந்த வாரத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி பீ.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் கிராமங்கள், கரவெட்டி ராஜகிராமம் ஆகிய 4 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த 19ஆம் திகதி முதல் இயங்க ஆரம்பித்ததோடு, 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 16 பேர் இரண்டு வார கால சிகிச்சையை நிறைவு செய்து இன்று தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கிருஸ்ணபுரத்திலும், முல்லைத்தீவு மாங்குளத்திலும் இந்த வாரத்தில் சிகிச்சை நிலையங்கள் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை முழுவதும் தற்போது பரவி வருகின்ற இந்த வைரஸ் மிகவும் வீரியமானது. நோயின் தாக்கமும் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே முடிந்தளவு ஒன்று கூடு%E