January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா: உயிரிழப்பு 58 ஆக உயர்வு – தொற்றாளர் எண்ணிக்கை 17,000 ஐ தாண்டியது

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

39, 54, 78 மற்றும் 88 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் கொழும்பு 08, 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலும் இருவர் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 544 பேருக்கு தொற்று

இன்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்று கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17,127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் 11,495 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.