July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலிருந்து தீபாவளிக்காக மலையகம் வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக மலையகத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த மாவட்டங்களில் தங்கியிருக்கும் மலையகத்தவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது ஊர்களுக்கு செல்ல முயற்சிக்கக் கூடும் என்பதனாலேயே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி து.சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அபாய வலயங்களில் இருப்பவர்கள் மலையகத்திற்கு வந்தால் அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் தனிமைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படலாம் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி து.சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் தற்போது இருக்கும் இடங்களில் இருந்தவாறே, சுகாதார பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுமாறும் அவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மஸ்கெலியா சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நான்கு மாதக் குழந்தையொன்று உட்பட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மஸ்கெலியா பிரதேசத்தில் இதுவரையில் 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டம், ஸ்டொக்கொம் தோட்டம், காட்மோர் தோட்டம், பிரவுன்லோ தோட்டம் ஆகிய இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.