November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிமைகளை வென்றெடுக்க களமிறங்கிய மலையக ஜனநாயக முன்னணி!

மலையகத்தில் அடிக்கடி கட்சி தாவுகின்றவர்களுக்கு வாக்களித்து தமது பெருந்தோட்ட மக்கள் தமது உரிமைகளை வெற்றி பெற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மலையக ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

மலையக ஜனநாயக முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேச்சை குழு இல. 11 இல் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக ஊடக சந்திப்பு சனிக்கிழமை அட்டன் டைன் அன் ரெஸ்ட் விருந்தகத்தில் நடைபெற்றது.

இதன்போது குழுவின் முதன்மை வேட்பாளர் எஸ். ஹெரோஷன்குமார் உட்பட வேட்பாளர்கள் கந்துகொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பில் எஸ். விஜயகுமார் கூறுகையில்,

பெருந்தோட்ட மக்கள் அரசியல்வாதிகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அண்மையில் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபா கிடைத்தது தமக்குக் கிடைத்த வெற்றி என்று பிரசாரம் செய்தார்கள். இவ்வாறு வழங்க முடியும் என்று கம்பனிகள் சார்பில் ரொஷான் இராஜதுரை தான் கூறியிருந்தார். இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அத்தோடு சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் கருத்து கூற முடியும். ஆனால், கைச்சாத்திட்ட தினத்திலேயே சம்பளம் கிடைத்து விட்டதாக வெற்றி விழா கொண்டாடினார்கள். இத்தகைய பொய், புரட்டுகளை அம்பலப்படுத்தி எமது மக்களுக்குத் தெளிவூட்டுவதே எமது நோக்கமாகும்.

மலையகத்தில் அடிக்கடி கட்சி தாவுகின்றவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எமது கொள்கைகளை ஆதரித்து மலையகத்தில் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகின்றது. இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் எமது சுயேச்சைக் குழுவின் “தாயக்கட்டை” சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.