October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் தடுப்பூசி பரிசோதனை; ரஷ்யா திட்டம்

இந்தியாவில் தனது கொரோனா வைரஸ் மருந்தினை 100 தன்னார்வ தொண்டர்களிடம் பரிசோதனை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.

ரஷ்ய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜி) ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.

சோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவன ஆய்வகங்களுக்கு டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனை நடைபெறும் திகதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும்.

மருத்துவ பரிசோதனையின் 3 வது கட்டத்திற்குச் செல்வதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டிசிஜிஐ கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.

2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கூறியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.