November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையை பழி தீர்த்தது மும்பை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையை 114 ஓட்டங்களுக்கு ள் மடக்கிய மும்பை அணி, 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கிரான் பொலார்ட் தலைமையில் களமிறங்கியது. அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு கையில் உபாதை ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இதேவேளை, சென்னை அணியில் ஷேன் வொட்ஸனும் இடம்பெறவில்லை. இதனால் இம்ரான் தாஹிர், ருத்துர்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றனர்.

பதில் அணித்தலைவருடன் மும்பை அணி களமிறங்கினாலும் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 2.5 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்வரிசையில் களமிறங்கி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷாம் கரன் 2 சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று சென்னை அணியை மீட்டார். அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியால் 16 ஓட்டங்களையே பெற முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமாகப் பந்துவீசிய மும்பை வீரர்களில் ட்ரென் பௌல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரி,பும்ரா, தீபக் சகார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பதம் பார்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குவின்டன் டி கொக், இஷான் கிஷான் ஜோடி வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக 12.2 ஓவர்களில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தது. இதனால் மும்பை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இஷான் கிஷான் 37 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 68 ஓட்டங்களையும், குவின்டன் டி கொக் 2 சிக்ஸர்களுடன் 46 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இந்த வெற்றி மும்பை அணி பெற்ற ஏழாவது வெற்றியாகும்.

10 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. சென்னை அணி 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. சென்னை அணி கிட்டத்தட்ட பிளே ஓவ் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.