May 17, 2025 13:27:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆறு ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சர்வதேச அளவில் சைபர் தாக்குதல்களை நடத்தினர் என ஆறு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் மீது அமெரிக்காவின் நீதி திணைக்களம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த ஆறு அதிகாரிகளும் சர்வதேச அளவில் கணினி வலையமைப்புகளை ஸ்திரமிழக்க செய்யும் ரஷ்ய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக செயற்பட்டனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பேரழிவை தரக்கூடிய வைரஸ்களை பயன்படுத்தி இவர்கள் ஆயிரக்கணக்கான கணினிகளை செயலிழக்க செய்தனர். இதன் காரணமாக சர்வதேச அளவில் ஒரு பில்லியன் டொலருக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே இந்த ஹக்கர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகள் உக்ரைன், ஜோர்ஜியா ஆகிய நாடுகளில் தலையிட்டனர், பிரான்ஸ் தேர்தலில் தலையிட்டனர் எனவும் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா தனது கொடியுடன் பங்கெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் இவர்கள் அந்த ஒலிம்பிக் போட்டிகளையும் இலக்குவைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.