October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜோ பைடன் இந்தியாவின் நலனுக்கு உகந்தவரல்ல’: ட்ரம்பின் மகன் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் சீனாவுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கமாட்டார் என்பதால் அவர் இந்தியாவின் நலனுக்கு உகந்தவரல்ல என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய நூலை வெளியிட்டு உரையாற்றும் போதே டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சீனாவின் அச்சுறுத்தல் குறித்து நாங்கள் உணரவேண்டும். இந்தியர்கள், அமெரிக்கர்களை விட அதனை நன்கு உணர்ந்தவர்கள் வேறு யாருமிருக்கமுடியாது.

ஜோ பைடனின் மகனுக்கு சீனா 1.5 பில்லியனை வழங்கியுள்ளது. அவர் பெரும் வர்த்தகர் என்பதால் இந்தப் பணத்தை சீனா வழங்கியிருக்கலாம் அல்லது பைடன் சீனா குறித்து மிதமான போக்கை கடைப்பிடிப்பார் என்பதால் அதனை வழங்கியிருக்கலாம். இதன் காரணமாக பைடன் இந்தியாவிற்கு பாதகமானவர்” என டிரம்பின் மகன் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் மற்றும் அவரது மகனின் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை டிரம்பின் மகன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

நியு யோர்க் போஸ்டில் சமீபத்தில் வெளியான ஜோ பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் டிரம்பின் மகன் இந்த நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.