
இலங்கையின் குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 10 முக்கிய புள்ளிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் இவர்கள், இலங்கையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வருபவர்கள் என இண்டர்போல் கூறியுள்ளது.
இந்தத் தகவலை அடுத்து, அவர்களை கண்டுபிடிக்க தமிழக பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சுனில் ஜெமினி பொன்சேகா
இதனிடையே, இலங்கையில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றக் கும்பலொன்றின் தலைவரான சுனில் ஜெமினி பொன்சேகா பெங்களூரில் கைதாகியுள்ளார்.

ஏற்கனவே, 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தமிழகத்தில் கைதாகி 7-ஆண்டு சிறையின் பின்னர் 2010 இல் வெளியில் வந்த பொன்சேகா, அதன்பின்னர் பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி போலி இந்திய கடவுச்சீட்டுடன் அங்கேயே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
தொடர்ந்தும் தமிழகத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர், பெங்களூரு சென்று தலைமறைவாகியிருந்த போது தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.