இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் வலைப்பயிற்சிகளில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அணியின் இரண்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 14-வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக தயாராகும் பணியில் ஒவ்வொரு அணியினரும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறியது. ஆனால் இந்த முறை மீண்டும் சம்பியன் பட்டத்தை வெல்லும் ஆவேசத்துடன் ஐ.பி.எல் தொடரில் களமிறங்க உள்ளதுடன், எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் சென்னையில் பயிற்சியை தொடங்க உள்ளது.
இதில் பங்கேற்கவுள்ள அந்த அணியின் தலைவர் எம்.எஸ். தோனி கடந்த வாரம் சென்னையை வந்தடைந்தார். இதன்படி, இந்த வாரம் முதல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சியில் தோனி, அம்பதி ராயுடு உள்ளிட்ட அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது இவ்வாறிருக்க, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் வலைப் பயிற்சிகளில் ஈடுபட இலங்கை அணியின் இளம் பந்து வீச்சாளர்களான மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன ஆகிய இருவருக்கும் சென்னை அணி நிர்வாகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அபுதாபி டி-10 லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற நொதர்ன் வொரியர்ஸ் அணியில் இடம்பிடித்த மஹீஷ் தீக்ஷன, இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் அசத்தி ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.
மறுபுறத்தில் இறுதியாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்காக விளையாடியவரும், லசித் மாலிங்கவின் பந்துவீச்சு பாணியைக் கொண்ட 19 வயதுடைய மதீஷ பத்திரன இறுதியாக நடைபெற்ற அபுதாபி டி-10 லீக் தொடரில் பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
இதனிடையே, மஹீஷ் தீக்ஷன தற்போது உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான டி-20 தொடரில் இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருவதுடன், மதீஷ பத்திரன கண்டி திருத்துவக் கல்லூரி அணிக்காக 19 வயதுக்குட்பட்ட போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளார்.
இதனால் குறித்த இரண்டு வீரர்களுக்கும் சென்னை அணியுடனான வலைப்பயிற்சியில் இணைந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல, இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதிக்காகவும் குறித்த இரண்டு வீரர்களும் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை சார்பில் 29 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தாலும், இறுதியில் 9 வீரர்களே குறும்பட்டியலில் இடம்பெற்றனர். ஆயினும் எந்தவொரு வீரரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
எது எவ்வாறாயினும், ஐ.பி.எல் குறும்பட்டியலில் இடம்பெற்றிருந்த சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவை தற்போது சென்னை அணிக்கு வலைப்பந்து வீச்சாளராக அழைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
எது எவ்வாறாயினும், சென்னை குழாமில் இவர்கள் இணைக்கப்படாவிட்டாலும் மேலதிக வீரர்களாக தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் தமது ஆற்றலை வெளிப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.