
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அரசாங்கத்தின் ஊடாக இது குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டமை தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பத்தி, காதர் மஸ்தான், சாந்த பண்டார, சந்திம வீரக்கொடி, எச்.எம்.எம்.ஹரிஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.