July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொலைதூரக் கல்வி முறையைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

தொலைதூரக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதமளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு தொலைதூரக் கல்வி முறை முன்னெடுக்கப்பட்டது.

தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இதற்கு முன்னரும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்து, பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு சிறந்த மாற்று வழிமுறையாக தொலைதூரக் கல்வி முறை அவசியமென உணரப்பட்டுள்ளது.

அதற்கமைய, தரம் 3 தொடக்கம் 13 வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, ஒளிபரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய கல்வி நிறுவனம், கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் மூலம் கல்வி நடவடிக்கைகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.