
கொரோனா வைரஸ் நாணயத் தாள்கள்,கைத்தொலைபேசி தொடு திரை, கண்ணாடிகள் மற்றும் எவர் சில்வர் போன்றவற்றில் ஒரு மாதம் வரையில் உயிர்வாழும் தன்மை கொண்டது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை செய்துள்ளனர்.
20 டிகிரி செல்சியஸ் வரையான வெப்ப நிலையில் குறித்த பொருட்களில் 28 நாட்களுக்கு கொரோனா வைரஸ் அழிவடையாது உயிருடன் இருக்கும் என்பதனை கண்டறிந்துள்ளனர்.
இது கைத்தொலைபேசி திரைகளில் காணப்படும் கண்ணாடி போன்ற மென்மையான மேற்ப்பரப்புகளில் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முந்தைய ஆய்வுகளை விட புதிய ஆய்வில் கொரோனா வைரஸின் வாழ் நாள் காலம் கணிசமாக அளவு நீண்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வைரஸானது நுண்ணிய மேற்பரப்பில் நான்கு நாட்கள் வரை உயிர்வாழக்கூடும் என்று கூறப்பட்டது.ஆனால் இந்த ஆய்வில் உயிர்வாழக் கூடிய காலம் அதிகமாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது.
வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
நேரடி சூரிய ஒளியில் வைரஸ் விரைவாக செயலிழக்கும் என ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புதிய ஆய்வு இருண்ட இடத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரையில் உயிர்வாழ முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சி.எஸ்.ஐ.ஆர்.ஓ தலைமை நிர்வாகி லாரி மார்ஷல் தெரிவித்துள்ளார். .