January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ராஜஸ்தான்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று மும்பை  அணியின் பயணத்துக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய களமிறங்கிய அணி 7 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் சூர்யகுமார் யாதவ்வும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர்.

இஷான் கிஷான் 39 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும், சௌரவ் திவாரி 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மும்பை அணி ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

என்றாலும் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 60 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ யாஸ் கோபால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 196 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 13 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. என்றாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதமடித்தார்.

மும்பை பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சஞ்சு சம்ஸனும், பென் ஸ்டோக்ஸும் 82 பந்துகளில் 152 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பௌண்டரிகளுடன் 107 ஓட்டங்களையும், சஞ்சு சம்ஸன் 3 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் பிரகாரம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் ஆறாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.