January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவானின் அதிரடியில் டெல்லியிடம் சரணடைந்தது சென்னை

(Photo: BCCI/IPL)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கெபிடெல்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் விக்கெட் மூன்றாவது பந்தில் வீழ்த்தப்பட்டது. ஷாம் கரன் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

ஷேன் வொட்ஸன் 36 ஓட்டங்களையும், பெப் டு பிலெசி 58 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர். அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியால் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அம்பாட்டி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி 21 பந்துகளில் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அம்பாட்டி ராயுடு 25 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 179 ஓட்டங்களைக் குவித்தது.

180 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணி இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்ததுடன், 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிருத்திவ் ஷா, அஜின்கெயா ரஹானே ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் தனி ஒருவராகப் பிரகாசித்த ஸிகர் தவான் சதமடித்து அசத்தினார். 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 14 பௌண்டரிகளை விளாசி 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிபெற 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்தத் தருணத்தில் அதிரடி காட்டிய அக்ஸார் பட்டேல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.