
Photo:BCCI/IPL
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லோகேஸ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
171 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி சார்பாக கடைசி பந்தில் நிகோலஸ் பூரான் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.
சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பாக ஏரோன் பிஞ்ச் 20 ஓட்டங்களையும், டெவ்டட் படிக்கால் 18 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் விராத் கோஹ்லி ஓரளவுக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 48 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டி விலியர்ஸ் ஆறாம் இலக்க வீரராகக் களமிறங்கி வெறும் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
கிறிஸ் மொறிஸ் 8 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் மொஹமட் சமி, எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


172 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் சார்பாக அணித்தலைவர் லோகேஸ் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஜோடி சிறந்த ஆரம்பத்தை அணிக்குப் பெற்றுக்கொடுத்தது. இவர்கள் முதல் விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மயன்க் அகர்வால் 3 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.லோகேஸ் ராகுலுடன் அடுத்து இணைந்த கிறிஸ் கெய்ல் சிக்ஸர் மழை பொழிந்து வெற்றியை இலகுவாக்கினார். இவர்கள் இருவருமே அடுத்தடுத்து அரைச்சதங்களைக் கடந்தனர்.
5 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்ற கிறிஸ் கெய்ல் வெற்றிக்கு ஓர் ஓட்டம் தேவையாக இருந்த போது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
கடைசி பந்தில் ஓர் ஓட்டம் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மற்றுமொரு மேற்கிந்தியத் தீவுகள் வீரரான நிகோலஸ் பூரான் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காத லோகேஸ் ராகுல் 5 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார்.பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.
இது இத்தொடரில் பஞ்சாப் அணி பெற்ற இரண்டாவது வெற்றி என்பதுடன் இந்த இரண்டு வெற்றிகளுமே பெங்களூர் அணிக்கு எதிராக ஈட்டியமை சிறப்பம்சமாகும்.
பஞ்சாப் அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
நான்கு அடுத்துவரும் போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் மாத்திரமே கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியால் பிளே ஓவல் சுற்று மீது நம்பிக்கை வைக்க முடியும்.