ரஷ்யாவுக்கு கண்டிப்பாக வலிமிகுந்த பரிசை வழங்க வேண்டும் என்று யுக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், கனடா நாட்டு பாராளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாற்றிய போதே ஜெலன்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.
யுக்ரைனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை யுக்ரைனுக்கு கனடா வழங்கிவரும் இரணுவ உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி, இதன்போது நன்றி கூறியதுடன், யுக்ரைன் வான் எல்லையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க கனடா உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் யுக்ரைன் மீது 21 ஆவது நாளாகவும் ரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களின் போது அமெரிக்காவின் செய்தி நிறுவனமொன்றை சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவரும் ஒளிப்பதிவாளர் ஒருவரும் யுக்ரைனில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போர் தொடர்பான செய்தி சேகரிப்புக்காக இவர்கள் கீவ் நகருக்குள் பயணம் மேற்கொண்டிருந்த போது, இவர்களது வாகனம் தாக்குதலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.