
தவறான வகையில் தான் தேசிய கீதத்தை பாடியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக பாடகி உமாரா சிங்கவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எல்பிஎல் (லங்கா பிரீமியர் லீக் ) தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது பிரதான மேடையில் உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை பாடிய போது, அவர் அர்த்தம் மாறும் வகையில் அதனை பாடியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இது தொடர்பில் பொதுநிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமாரா சிங்கவன்ச, தான் தான் பாடிய தேசிய கீதத்தால் எவருக்கேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
”தேசிய கீதத்தை திரபுப்படுத்தவோ அல்லது தவறான அர்த்தங்களை வழங்கவோ நான் எப்போதும் நினைத்தில்லை. நான் தாய் நாட்டை நேசிப்பவர், நாட்டின் கௌரவத்தை உயர்த்தும் வகையிலேயே பாடல்களை பாடுவேன். எனினும் தேசிய கீதம் பாடிய விதம் தொடர்பில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.