November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அமெரிக்கா வழங்கிய ஆதரவை மறக்க முடியாது”

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த 28ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2001 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது ஜோர்ஜ் புஷ் அவர்களின் தலைமையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் இருந்து இலங்கை மீள்வதற்கு பில் கிளிண்டன் தலைமையிலான அரசாங்கம் வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் ஜோ பைடனின் தலையீட்டுடன் எமது நாட்டுக்கு உதவி கிடைத்திருக்காவிட்டால் இவ்வருடப் பெரும் போகம் வெற்றியளித்திருக்க முடியாது என்றும் கூறினார்.

74 ஆண்டுகால அமெரிக்க-இலங்கை நட்புறவு, கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், முதலாவது நாணயச் சட்டம் மற்றும் மத்திய வங்கியை நிறுவுதற்காக சிறந்த சட்ட கட்டமைப்பொன்றை தயாரித்தல் என்பவற்றுக்காக அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இவ்வாறான நீண்ட கால மற்றும் உளப்பூர்வமான நல்லுறவை பேணிவரும் இலங்கையும் அமெரிக்காவும் தொடர்ந்தும் எதிர்காலத்தில் நெருங்கிய நண்பர்களாக செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இலங்கையும் பிரிக்க முடியாத பங்காளிகளாக, சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்வதாகவும் அவர் கூறினார்.