புலனாய்வாளர்கள் என்று கூறப்படுபவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தன்னையும் சாணக்கியன் எம்.பியையும் பின் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தங்களின் உயிருக்கு அச்சுறுத்தலானது என்றும், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சுமந்திரன் எம்.பி பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் முறையிட்டார்.
வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சனையை முன்வைத்தே அவர் இதனை கூறியுள்ளார்.
நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பாராளுமன்றத்தில் இருந்து வாகனங்களில் சென்ற போது எங்களின் வாகனங்களை கிழக்கு மாகாண பதிவு இலக்க தகடை கொண்ட மோட்டார் சைக்கிளொன்று பின் தொடர்ந்ததாக எங்களின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்று சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் புலனாய்வாளர்கள் என்று பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார். அவ்வாறு ஏன் எங்களை பின்தொடர வேண்டும். இது எங்களின் உயிருக்கு அச்சுறுத்தலானது என்று சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.