உணவு நெருக்கடியில் எவரையும் பசியில் வாட விடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணித்தார்.
நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் இலக்குகளை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றை அடைவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக 225 பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் எஞ்சியவை அமைச்சுகள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ். இதற்காக பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டது.
மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, பாட்டலி சம்பிக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருடன் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நளின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.