இலங்கை மக்கள் எதிர்வரும் சில மாதங்களுக்கு பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை என்றும், பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனால் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஏற்படக் கூடிய நிலைமை குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.