பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று முதல் முன்னெடுத்து வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் வரையில் போராட்டத்தை நிறுத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
17 ஆம் திகதிக்குள் அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகியிருக்காவிட்டால் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு எவருக்கும் இடமளிக்காத வகையில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நேற்று முதல் பாராளுமன்ற சுற்றுவட்ட சந்திக்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தனர். இதன்போது நேற்று மாலையும், இன்று பிற்பகலும் மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சியின் கேள்வியெழுப்பிய போது, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபை தற்காலிகமாக 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்ததால் அங்கு பதற்றமான நிலைமை உருவாகியது. இதனை தொடர்ந்து சபை மீண்டும் கூடிய போது, சபையை 17 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேவேளை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தில் இருந்து எம்.பிக்கள் வெளியேற முடியாதவாறு மக்கள் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது குறுக்கு வீதியொன்றில் பயணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சிக்கினர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், எம்.பிக்கள் மீண்டும் பாராளுமன்ற பக்கமாக திரும்பிச் சென்றனர்.