கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு தாம் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஒரு தரப்பினர் இடைக்கால அரசாங்க யோசனைக்கு இணங்காது, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையையும் கொண்டு வரவே முயற்சிக்கின்றனர் என்றும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை என்பது இலகுவான விடயம் அல்லவெனவும், போதுமான உறுப்பினர்களின் கையெழுத்து இல்லாவிட்டால் அது சபாநாயகரினால் நிராகரிக்கப்படலாம் என்பதுடன், அது உயர்நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதியை வெளியேற்றுவது இலகுவானது அல்ல என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளைய நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் எனில் புதிய அரசாங்கத்தை அமைக்க பிரதமரும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும், இந்த நேரத்தில் 113 என்ற பெரும்பான்மை மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என நினைத்தால் அது முற்றிலும் தவறானது என்றும் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.