November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்கத் தயாராகும் அரசாங்கம்!

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை ஆரம்பமான குறித்தப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி காலிமுகத்திடல் பகுதியில் அவர்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்து போராட்டத்தை தொடர்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில், போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருடன் பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

சமூக பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலிமுகத்திடலில் தற்போது ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என்று அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவாலை வெற்றிகொள்வதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பிரதம் கூறியுள்ளார்.

இதற்கமைய கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.